சென்னை:புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா அடுக்குமாடி கட்டுமானத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து முதலமச்சர் மு.க. ஸ்டாலினிடமும், குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன், குடிசை மாற்று வாரிய அலுவலர்களிடமும் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், "அடுக்குமாடி கட்டடத்தின் மோசமான தரம் வெளிப்படையாக உள்ளது மற்றும் கட்டடத்தின் பல்வேறு இடங்களில் தேய்ந்து கிடக்கும் வெளிப்புற பூச்சு தெரிகிறது. இதனால் கையால் சுவரை சொறிந்ததன் மூலம் வெளிப்புற பூச்சு எப்படி வருகிறது என்பதை இயக்கத்தின் பிரதிநிதிகள் தெளிவாகக் கண்டறிந்துள்ளது. மேலும் அட்டவணையில் இருப்பதை விட குறைவான சிமென்ட் கலப்பது, கட்டடத்தின் வெளிப்புற பூச்சு மிகவும் மோசமான தரத்தில் உள்ளது.
தரமற்றதாக இருக்கும் சுவர்கள்
மூன்றாம் தரப்புக்கும் பொறுப்பான பொறியாளர்கள் தரக் கடைப்பிடிப்புச் சான்றிதழை வழங்கியிருப்பதால், அவர்கள் ஒப்பந்தக்காரருடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதோடு, அவர்கள் இந்த ஊழல் குற்றச் செயலுக்கு முதன்மையானவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளிப்புற சுவர்களில் பூச்சு மோசமாக இருந்த நிலையில் முதல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட வீட்டின் ஸ்லாப் மிகவும் தரமற்றதாக இருப்பதையும், கையில் இழுப்பதன் மூலம் உடைகிறது என்பதையும் கண்டறிந்தோம். எனவே முழு கட்டடத்தின் தரத்தையும் சரிபார்க்க வேண்டும். சுவர்கள், கதவுகள், பூட்டுகள், குழாய்கள் போன்றவைகள் தரமற்றதாக இருப்பது தெரிந்தது.