தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசனில், 1,480 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக, அறப்போர் இயக்கத்தினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம், ” கடந்த நான்கு ஆண்டுகளில் கிறிஸ்டி ஃபிரைட் கிராம் நிறுவனத்தின் மூலம் சக்கரை, பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதை ஆதாரங்களுடன் சி.பி.ஐக்கு கொடுத்துள்ளோம். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இந்த ஊழலில் பங்குள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே கொள்முதல் செய்யும்படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு,. 2018 இல் நடைபெற்ற டெண்டரில் 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், 2019 ஆம்ஆண்டு டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்கேற்கும்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கிலோ 38 ரூபாய் விலையான சர்க்கரையை, ஜூலை 2019 டெண்டரில் 48 ரூபாய் என கொள்முதல் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாமாயில் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது. அதிகம் பேர் போட்டியிடாதபடியான டெண்டர்களை உருவாக்கி பாமாயிலை கிறிஸ்டி நிறுவனத்திடம் வாங்கியுள்ளனர். உடைத்த பருப்புகள்தான் சப்ளை செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையை கடைபிடிக்காமல், உடைக்காமலேயே கிறிஸ்டி நிறுவனம் வழங்கியுள்ளது. பருப்பில் மட்டுமே 111 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளனர்.