சென்னை:திருவொற்றியூர் தொகுதிக்குள்பட்ட அரிவாக்குளத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்ததால் வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்குத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார் .
தொடர்ந்து அமைச்சர் தா.மோ. அன்பரசன், “திருவொற்றியூர் தொகுதியின் அரிவாக்குளத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 28 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு 27.122021 அன்று இடிந்து விழுந்துவிட்டன.
முதலமைச்சர் பொது நிவாரண நிதி
இத்தகவலை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் 28 குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .1 லட்சம் வீதம் ரூ .28 லட்சம் வழங்க ஆணையிட்டு, அன்றைய தினமே வழங்கப்பட்டது” என்றார்.
மேலும், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த வீடுகளை இழந்த 28 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை ஏற்று இன்று ஜனவரி 2 ஆம் தேதி, 28 குடும்பங்களில் 17 குடும்பங்கள் மாற்று வீடுகள் பெற ஒப்புக்கொண்டு மாற்று வீடுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த 17 குடும்பங்களில் 9 குடும்பங்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ எர்ணாவூர் திட்டப் பகுதியிலும் , 8 குடும்பங்களுக்கு என்.டிஓ குப்பம் திட்டப் பகுதியிலும் மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.