சென்னை: சில மாதங்களுக்கு முன்பு அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும், படத்தின் மையக்கருவாக அமைந்த ராஜாக்கண்ணு குடும்பத்தினருக்கு உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் அக்கட்சி சார்பில், சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று (ஜனவரி 5) பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன், வாசுகி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஜெய் பீம் படக்குழுவினரை பாராட்டி கௌரவிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேடயம் வழங்கினார்.
கம்யூனிஸ்ட் கட்சியினரின் மன உறுதி
விழாவில் பேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய போராட்ட வரலாற்றின் அத்தியாயத்தை படமாக்கிய ஜெய் பீம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
படத்தில் ராஜாக்கண்ணுவாக நடித்த மணிகண்டன் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சியினரின் மன உறுதியைக் கண்டு வியப்பதாகவும், அவர்கள் மக்களின் போராட்டத்திற்காக 90 விழுக்காடு ஒதுக்குகிறார்கள், தங்கள் குடும்பத்திற்காக 10 விழுக்காடு ஒதுக்குகிறார்கள் என்று கூறினார்.
கம்யூனிச இயக்கத்தை படமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரைப்படம் எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கதை எழுதும்போது கதைக்குள் அவர்கள் வந்துவிட்டார்கள் என இயக்குனர் ஞானவேல் பேசினார்.