சென்னை: தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திக்கு ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் 153 கி.மீ கொண்ட தூரத்திற்கு குழாய் மூலம் தமிழ்நாடு கொண்டுவர ஆய்வு மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
கிருஷ்ணா நதிநீரின் பங்கு
இந்த அறிவிப்பு 2019ஆம் ஆண்டிலிருந்து வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளதால் இந்த அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுமா என்ற கேள்வி நீரியல் நிபுணர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
வட கிழக்கு பருவமழை சென்னையில் பொய்த்துப்போனால் கிருஷ்ணா நதிநீரின் பங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக வருவதால் கால்வாயின் அருகே வசித்து வரும் விவசாயிகள் தண்ணீரை இயந்திரங்கள் மூலம் உறிஞ்சுவதாக பொதுப்பணித்துறைக்கு புகார்கள் அடிக்கடி வருவது வழக்கம்.
இதனால் குழாய் மூலம் கிருஷ்ணா நதிநீரை கொண்டு வரலாம் என 2019ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2020ஆம் ஆண்டு இந்த திட்டத்தை பற்றி பேசப்பட்டாலும் நடைமுறைக்கு வரவில்லை.