சென்னை: சர்வதேச மகளிர் டென்னிஸ் (WTA) தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளதை அடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக இந்த டென்னிஸ் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறாததை அடுத்து, இந்த ஆண்டு தொடருக்காக என்ன மாதிரியாக தயார் செய்யப்பட்டு வருகிறது என்பது குறித்து மைதான அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரை தமிழ்நாடு அரசும், WTA-ம் இணைந்து நடத்துகிறது. செப்டம்பர் 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்காக மைதானத்தை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக மைதானம் செயல்பாட்டில் இல்லாத நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வீரர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
இந்த போட்டி நடத்த மொத்தம் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், உலகம் தரம் வாய்ந்த நவீன விளக்குகள் 3 கோடியில் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த போட்டி நடத்த முதற்கட்டமாக 1 கோடியே 50 லட்சம் முதல்வர் விடுவித்து இருக்கிறார் என்றும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக விளையாட்டுத்துறை சரிவர செயல்படாத நிலையில், தற்போது விளையாட்டுத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.