சென்னை:சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழ் மொழியில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? எனப் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கே.ஆர். செல்வராஜ் குமார் என்பவர் மீனவர் நல சங்கம் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடாமல், அது குறித்த கருத்துக்கள், ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும்; அதுவரை வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 அறிவிப்பை நிறுத்தி வைக்கக் கோரும் சூழலியல் மாணவர்கள்!
இந்த மனு இன்று (ஆகஸ்ட் 7) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7ஆம் தேதி வரை தடை விதித்துள்ளதால், இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.