தஞ்சாவூர்மாவட்டம், கும்பகோணத்தில் ரகசிய இடத்தில் சில சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே, விசாரணையில் தஞ்சாவூர் ரஞ்சித் மற்றும் கும்பகோணத்தைச்சேர்ந்த உதயகுமார் ஆகிய இருவரிடம் புராதன லட்சுமி மற்றும் சரஸ்வதி சிலைகள் இருப்பது தெரியவந்தது.
இந்தச் சிலைகள் வெளிநாட்டுக்குக் கடத்தப்பட இருப்பதாகத் தகவல் வந்ததால் தனிப்படை போலீசார் சிலை வாங்குபவர்கள் போல ரஞ்சித் மற்றும் உதயகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் வரை பேரம் பேசி உள்ளனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார் இதனை நம்பிய கடத்தல்காரர்கள் ரஞ்சித் மற்றும் உதயகுமார் கும்பகோணம் சுவாமிமலை அருகே சிலையுடன் நேரடியாக வந்தபோது அவர்களைச் சிலைக் கடத்தல் தடுப்பு காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அதன் பின், அவர்களிடம் இருந்த ஒரு அடி உயரமுள்ள சரஸ்வதி சிலை மற்றும் முக்கால் அடி உயரமுள்ள லட்சுமி சிலை ஆகிய இரண்டு உலோக சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்ற விவரத்தையும் கைது செய்யப்பட்ட ரஞ்சித் மற்றும் உதயகுமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சலோக சிலைகளை வாங்குவது போல் நடித்து கடத்தல் கும்பலை மடக்கிப்பிடித்த போலீஸ்!