தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீட்டுக்கு நிச்சயம் நிரந்தரத் தீர்வு' - திமுகவை பலமாக நம்பும் கி. வீரமணி! - சென்னை பெரியார் திடல்

நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான பிரச்சினைக்கு திமுக நிச்சயம் நிரந்தரத் தீர்வு கொண்டுவரும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

திராவிட கழக தலைவர் கி வீரமணி, முக ஸ்டாலின், ஸ்டாலின் வீரமணி, முக ஸ்டாலின் கி வீரமணி
ANTI NEET PARTIES AND MOVEMENT

By

Published : Jul 1, 2021, 9:47 PM IST

சென்னை: நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

'சமூக நீதியாளர்களின் கலந்துரையாடல்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, என்.ஆர். இளங்கோ எம்பி, விசிக தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை சுப. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பீமாராவ், மதிமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சமூக நீதிப் பேரவை சார்பில் சற்குணம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட 32 கட்சியினர், பிற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொருவரும் நீட் தொடர்பாகத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.

தீர்மானம் நிறைவேற்றம்

நீட் தேர்வை ஆதரித்து பாஜக உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் நீட் தேர்வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொண்டு நீட்டிற்கு எதிரான வாதங்களைச் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் வாதிடுவோம் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, "திமுக நிச்சயம் நீட் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கொண்டுவரும்.

திமுக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு செல்லாது என பாஜக தொடுத்துள்ள வழக்கு தொடர்பாகவும், சட்டப்பேரவையில் ஒரு நிலைப்பாட்டிலும், பொதுவெளியில் ஒரு நிலைப்பாட்டிலும் பாஜக பேசிவருவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றினோம்.

நிச்சயம் நிரந்தரத் தீர்வு

சாதாரண மக்கள் அல்லது அதற்கும் கீழுள்ளவர்கள்கூட மருத்துவர் ஆகிவிடுவர் என பாஜக கொச்சைப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் தங்களை, பாஜகவின் இந்த வழக்கில் எதிர்த்தரப்பாக இணைத்துக்கொண்டு வாதங்களை சட்டபூர்வமாக முன்னெடுக்க வேண்டும்.

நீட் தொடர்பான பிரச்சினைக்கு திமுக நிச்சயம் நிரந்தரத் தீர்வு கொண்டுவரும். மக்கள் நலன் காக்க உறுதியாக உள்ளோம். சட்டப் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும் தீவிரமாக முன்னெடுப்போம்" என்றார்.

இதையும் படிங்க: சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

ABOUT THE AUTHOR

...view details