இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கங்களில் அவர்களுக்கு பயிற்சி அளித்து, ஊக்கத் தொகை வழங்கி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு: முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து - மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன்
சென்னை: விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான "ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது", தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம், 2018ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கல பதக்கம் மற்றும் 2019ஆம் ஆண்டு உலக பாரா சாம்பியன் ஷிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்று இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது. தமிழ்நாடு அரசும் இரண்டு கோடி ரூபாய் ஊக்கத் தொகையை மாரியப்பனுக்கு வழங்கியது.
மேலும், மாரியப்பனுக்கு "ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது" மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தருணத்தில், தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்ற திருவள்ளுவரின் வாசகத்துக்கேற்ப மாரியப்பனின் மன உறுதியும், விடா முயற்சியும் அவரது வெற்றிக்கு வித்திட்டது". இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.