சென்னை:இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று மேடைகள்தோறும் முழங்கி மக்களின் ஆவலைத் தூண்டி நம்பிக்கையைத் தங்களுக்குச் சாதகமாக்கி வெளிப்படையான நம்பிக்கை மோசடியை அரங்கேற்றி இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
அக்கா வாங்க... அண்ணே வாங்க... உடனே கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குங்க... நாளைக்கு நம்ம ஆட்சிதான்... வந்தவுடனே மொத்தக் கடனும் ரத்து என்று முழங்கிய உதயநிதி ஸ்டாலின் மக்களுக்குச் செய்தது நம்பிக்கைத் துரோகம் இல்லையா?
தண்டனை மக்களுக்கா?
மக்களுக்கு ஆசைகாட்டி மோசம் செய்த திமுகவின் வெற்றி செல்லுபடி ஆகிவிட்டதால் இனி அவர்களுக்குத் தள்ளுபடி பற்றி அக்கறை இல்லை. அதாவது நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை. ஆனால் அந்தத் திட்டம் தள்ளுபடி ஆகிவிட்டது.
தற்போது அரசு கடும் நிபந்தனைகளை விதித்து நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளதால் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 நபர்களுக்கு மேற்பட்ட ஏழை எளிய வேளாண் பெருங்குடி மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதன்படி, குடும்ப அட்டை எண், ஆதார் எண் ஆகியவற்றைத் தவறாக வழங்கியிருந்தால் அவர்களுக்கெல்லாம் தள்ளுபடி கிடையாது என்கிறது திமுக. சரியான எண்ணைப் பரிசோதிக்காது கடன் வழங்கியது பாமர ஏழைகள் குற்றமா அல்லது வங்கியின் குற்றமா? ஆனால் தண்டனை மக்களுக்கா?
மொத்தக் கடனையும் ரத்துசெய்க
வறுமையால் பாதிக்கப்பட்ட பாமர உழவன் பயிர்க்கடனும் நகைக்கடனும் பெற்றுத்தானே பஞ்சம் பிழைக்க முடியும், தற்போது உழவருக்குத் தள்ளுபடி இல்லை என்பது உழவர்களுக்கான அநீதி இல்லையா?
நகைக்கடன் பெற்ற 48 லட்சத்து 84 ஆயிரத்து 727 பேர் வரை தள்ளுபடிக்குத் தகுதி உடையவர்களாக இருந்தபோதும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் ஏமாற்றிவிட்டு வெறும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டும் நகைக்கடன் பெற தகுதியுடையவர்கள் என்று அரசு சொல்வது ஏற்புடையதல்ல. இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
'நாடக அரசியலும் நகைக்கடன் தள்ளுபடியும்; திமுக அரசே மொத்த நகைக் கடனையும் ரத்துசெய்!' ஐந்து சவரன் நகைக்கு குறைவாக அடைமானம் வைத்து நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் மொத்தக் கடன் ரத்தாக வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - ஐ. பெரியசாமி