சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதனை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் கொண்டு வரப்படாமல் உள்ளது. தமிழ்நாடு அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 13,600 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது.
ஆனால், தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ 5.44 லட்சம் வசூல் செய்யப்படுகிறது. எனவே அரசின் இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி,பல் மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் உடனடியாக இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதில் கடந்த 21ஆம் தேதி மாணவர்கள் தங்கி இருந்த விடுதிகள் மூடப்பட்டன. மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பல் மருத்துவ படிப்பிற்கான வளாகங்கள் 22ஆம் தேதி முதல் மூடப்படுகின்றன. எனவே மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
கல்லூரியின் வளாத்திற்குள் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படலாம். அது போன்ற சூழ்நிலையில் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மாணவர்கள் மீது வழக்குப்பதிவு: எச்சரிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்! சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், “பெற்றோர்களை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மிரட்டுகிறது. இந்த மிரட்டல், உருட்டலை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும். தொழிற்சங்கத் தலைவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், தீவிரவாதிகள் போல் சித்தரிப்பதும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்குபவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க கல்லூரி நிர்வாகம் முயல்வதும் கடும் கண்டனத்திற்குரியது. கல்லூரி வளாகத்திற்குள் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதற்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். காவல் துறையை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதித்தது சரியான செயலாகது” என்றார்.
இதையும் படிங்க...கடல் ஆமை பாதுகாப்பாக முட்டையிடும் அபூர்வ காட்சி!