தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஆளுங்கட்சி அராஜகம்; கண்துஞ்சாது கழகப் பணியாற்றிய காவல் துறை!' - Annamalai statement about Ruling party anarchy in elections

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியால் அராஜகம் அவிழ்த்துவிடப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் கண்களை மூடிக்கொண்டதாவும் குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, காவல் துறையினர் கண் மூடாமல் கழகப் பணி ஆற்றினர் என்றார்.

Annamalai
Annamalai

By

Published : Feb 21, 2022, 4:06 PM IST

சென்னை:இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல், ஆளும் திமுகவின் கோரமுகத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியது. ஒரு ஆட்சியில் அரசு எந்திரம் இத்தனை தூரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

இதுவரை நடந்திருக்காது என்று சொல்லும் அளவிற்கு திமுகவின் இதற்கு முந்தைய அராஜகத்தை எல்லைம் விஞ்சியது. திமுகவினரைப் பார்த்துக் காவல் துறை அஞ்சியது. மாநில தேர்தல் ஆணையம் மகிழ்வாகத் துஞ்சியது. அராஜக குண்டர்களிடம் மாவட்ட நிர்வாகம் அடிபணிந்துக் கெஞ்சியது.

சமூக விரோத வைரஸ்கள் - திமுகவினரைச் சாடும் அண்ணாமலை

வாக்குச்சாவடிகளுக்கு வெளியே வழக்கறிஞர்கள் போல கறுப்பு வெள்ளை உடையிலே ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஐம்பதிலிருந்து நூறு பேர் நிறுத்தப்பட்டார்கள். இவர்களை விரட்டியடிக்கும் துணிவு இல்லாமல் பணிவு காட்டிய காவல் துறை தன் ஆளும்கட்சி விசுவாசத்தை செம்மையாகச் செய்து முடித்தது.

கரோனா தொற்றாளர்களுக்காக வரையறுக்கப்பட்ட மாலை 5 லிருந்து 6 மணிவரை கள்ள ஓட்டுக்காகத் திமுகவால் திட்டமிடப்பட்டிருந்ததை அறிந்தே தனி நேரம் தரப்பட வேண்டாம் எனத் தடுத்துப் பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்தபடி இந்த கரோனா வைரஸ் நேரத்தை சமூக விரோத வைரஸ்கள் எடுத்துக்கொண்டன.

அனைத்து வாக்குப்பதிவு மையங்களின் உள்ளே புகுந்த திமுக குண்டர்கள் சரளமாகத் தடைகள் இன்றி கள்ள வாக்குகளைப் பதிவு செய்தார்கள். மத்தியத் தேர்தல் பார்வையாளர்களையும் மத்திய ரிசர்வ் படையையும் அனுமதிக்க மாட்டோம், இது எங்கள் மாநில உரிமை எனச் சத்தமிட்ட திமுகவின் காரண காரிய கோரமுகம் வெளிப்பட்டது.

காவல் துறை அனுமதியுடன் திமுக கள்ள ஓட்டு

கோவை 63ஆவது வார்டில் மண்டபங்களில் கரூரைச் சேர்ந்த வெளியூர் ஆட்கள் பரவலாகத் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு கள்ள ஓட்டு போடுவதற்காகப் பணம் வழங்கப்பட்டது. இவை அத்தனையும் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னையில் மண்டலம் 7 வார்டு எண் 88 - இங்கு திமுகவினர் சாவடிக்குள் குழுவாக நின்றுகொண்டு வாக்காளர்களிடம் திமுகவிற்கு ஓட்டுப் போட வலியுறுத்தினர். மாலை 5 மணிக்கு மேல் கள்ள ஓட்டு போடுவதற்காக காவல் துறை அனுமதியுடன் குழுவாக வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்றனர். இவை அத்தனையும் காணொலிப் பதிவுகளாக ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றார்.

  • மேலும் மாநிலம் முழுவதும் இதுபோல திமுகவினர் கட்டவிழ்த்துவிட்டதாக பல இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை அண்ணாமலை பட்டியலிட்டார்.

மேலும், தமிழ்நாட்டில் சிறு அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாகத் தேர்தல் நடைபெற்றதாக தமிழ்நாடு டிஜிபி சொன்னதைச் சுட்டிகாட்டிய அண்ணாமலை, உண்மைதான் ஒருவேளை திமுகவின் அராஜகத்தை காவல் துறை அடக்க முயற்சி செய்திருந்தால் அசம்பாவிதங்கள் நடந்திருக்கும் என்றார்.

நடந்ததுதான் நடந்துபோச்சு வாக்கு எண்ணிக்கையாவது உருப்படியா நடத்துங்க என்ற தொனியில் அண்ணாமலை கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறார்:

  • ஆளும் கட்சியின் எம்எல்ஏக்களையும், அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கக் கூடாது
  • நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும்
  • பாதுகாப்பிற்குத் துணை ராணுவத்தை அழைக்க வேண்டும்
  • அனைத்து நடவடிக்கைகளையும் - குறிப்பாக வாக்குப்பதிவு எண்ணிக்கையைக் காட்டுவது தெளிவாக காணொலிப் பதிவு எடுக்க வேண்டும்

மாநில தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையையாவது மனசாட்சியுடன் நடத்துமா அல்லது ஆளும் கட்சிக்குத் துணைபோகும் அவலத்தைத் தொடருமா? என்ற கேள்விக் கணையுடன் தனது அறிக்கையை நிறைவுசெய்தார் அண்ணாமலை.

இதையும் படிங்க: ராகுலுக்கு 'தமிழன்'ஆக அண்ணாமலையின் பதில் இதுதான்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details