சென்னை:தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தை ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.
மறுகன்னத்தையும் காட்டுவோம்: இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். அம்பேத்கர் பிறந்த நாளினை பாஜக மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை வழங்கும் நாளாகக் கொண்டாடி வருகிறது. தொண்டர்கள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. சில தலைவர்கள் தவறாக வழி நடத்துகின்றனர்.
அண்ணல் அம்பேத்கரை வைத்துத் தான் அரசியல் செய்ய முடியும் என இருக்கும் தலைவர்களைத் திருத்த முடியாது. அம்பேத்கர் சித்தாந்தத்தை முழுமையாகப் பின்பற்றும் கட்சி பாஜக. ஒரு போதும் வன்முறைக்கு, வன்முறை தீர்வாகாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டும் அளவில் அமைதியின் வழியில் செல்கிறோம்' எனக் கூறினார்.
ஆளுர் ஷாநவாஸ்:அண்ணாமலை கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக விசிக சட்டப்பேரவை உறுப்பினர் ‘டீ செலவு மிச்சமா? ஆளுநர் மாளிகைக்குச் செல்ல ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னைக்கான புறக்கணிப்பை மலிவுப்படுத்தக்கூடாது’ என்று கூறினார்.