சென்னை :அண்ணாமலை மன்னிப்பு கேட்காத நிலையில் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளவும் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தமிழ்நாடு வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை, கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பி உள்ளார். அண்ணாமலையின் கருத்திற்கு அவர் 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மன்னிப்பு கேட்காத பட்சத்தில் கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார். பொய் மட்டுமே பேசி தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராகத் திகழும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய் கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் கூறினார்.