சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நேற்று (செப். 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய அரசின் உழவருக்கு நன்மைபயக்கும், உழவரை வியாபாரிகளாக மாற்றும் மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று (செப்டம்பர் 27) கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தன. ஆனால் அப்போராட்டம் படுதோல்வியடைந்ததோடு, சில அரசியல் கட்சிகளைத் தவிர எந்தவொரு உழவனும் சாலையில் இறங்கி வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடத் தயாராக இல்லை.
துரோகம் இழைக்கும் திமுக
ஏனெனில், பிரதமரின் உழவருக்கான பயிர்க் காப்பீடு, கிசான் சம்மன் நிதி உள்ளிட்ட பல திட்டங்கள் உழவரின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டி உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து, மசோதா நிறைவேற்றியதன் மூலம் உழவர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார்.
25 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சிசெய்த திமுக, உழவரின் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால், ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக வெற்று ஆர்ப்பாட்ட அரசியலை செய்து உழவருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துக்கொண்டிருக்கிறது.