சென்னை:இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் முடியப் போகின்றது. எங்கள் ஆட்சி 'விடியல் ஆட்சி' என்றார்கள். மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைதான் நடந்துவருகின்றது. 'ஓட்டுப் போடாதவர்களும் எங்களை விரும்புகின்ற அளவுக்கு நாங்கள் ஆட்சி நடத்துவோம்' என்றார்.
தமிழ்நாட்டில் எங்குத் தொட்டாலும் ஊழல், எதற்குள் நுழைந்தாலும் கட்டிங். நேர்மையான அலுவலர்கள் என்று பிம்பமாக்கப்பட்டவர்களை நியமித்துப் பாதுகாப்பு அரண்போல எல்லா இடங்களிலும் தங்களுக்குச் சாதகமான ஊழலில் பெயர்பெற்ற அலுவலர்கள் மூலம் தமிழ்நாட்டைச் சூறையாடுவதுதான் நடந்துவருகின்றது. மிகக் குறுகிய காலத்திற்குள் மிக மோசமாக தமிழ்நாடு நிர்வாக அமைப்பை மாற்றியதில் ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார்.
ஊழல் குறித்து பேசாதவர்
தமிழக முதல்வர் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். பொங்கல் பரிசைக் கூடச் சிறப்பாக கொடுக்க முடியாத நிர்வாகம் நடத்தி வரும் தமிழக முதல்வர், அதில் நடந்த ஊழல் குறித்து இன்று வரையிலும் பேசாமல் இருப்பவர் இன்று புதிதாக அனைத்திய சமூக நீதி கூட்டமைப்பு என்பதனைத் தொடங்கி 37 தேசியத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் "சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதியைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
- யாருக்கெல்லாம் இந்தக் கடிதம் எழுதியுள்ளார் என்பதனை நாம் பார்த்தால் அவர்களின் தகுதியும் தராதரமும் நமக்குப் புரியும்?
தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர தமிழ்நாட்டில் வேறு எவரும் கட்சித் தலைமைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ள மு.க. ஸ்டாலினைப் போலவே...
- கடந்த 75 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் என்ற பகுதியை இந்தியாவின் பிரச்சினைக்குரிய பகுதியாகத் தங்கள் சுய லாபத்துக்காக மூன்று தலைமுறையாக வைத்திருந்த பரூக் அப்துல்லா, (J&K National Conference), மெகபூபா முப்தி (J&K PDP)
- ஐந்து தலைமுறை நேரு பரம்பரையில் எச்சமும் சொச்சமுமாக இடைச்செருகலாக வந்து பொம்மை மூலம் இந்தியாவை ஆள முடியும் என்று நிரூபித்த சோனியா அம்மையார் (Congress)
- தன் குடும்ப சுயநலத்துக்காக பிகார் என்ற மாநிலத்தையே புதைகுழிக்குள் வைத்து மக்கள் எழ முடியாத அளவுக்குக் கடந்த காலத்தில் காட்டாட்சி புரிந்த லாலு பிரசாத் யாதவ் (RJD)
- ஊழலுக்கென்று இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவாக்கிய சரத்பவார் (NCP)
- இந்தியாவில் மோடியின் நிர்வாகத் திறமையைக் கண்டு கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் வேரடி மண்ணோடு புடுங்கி எறியப்பட்ட இரண்டு கம்யூனிஸ்ட்கள் டி. ராஜா (CPI), சீதாராம் யெச்சூரி (CPI-M)
- காவல் துறை ஆணையர்கள் என்பவர்கள் எங்களுக்கு மாதாந்திர தண்டல் வசூலித்துத் தரக் கடமைப்பட்டவர்கள் என்று அலங்கோல ஆட்சி நடத்திவரும் உத்தவ் தாக்ரே (Shiv Sena)
- அலங்கோல ஆட்சி நடத்துவதே என் பாணி என்று மேற்கு வங்க மண்ணின் மைந்தர்களைக் கூட்டு பாலியல் செய்ததைக் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்த மம்தா பானர்ஜி (TMC)… என்று மொத்தம் 37 பேருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் காவிரி நதி நீர்ப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய முடியாது. கச்சத்தீவு வாயே திறக்க முடியாது. இலங்கைப் பிரச்சனை பற்றிப் பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளும் அவ்வப்போது முடிவுக்கு வந்துவிடுகின்றன.
17 ஆண்டு அதிகாரத்தைச் சுவைத்தீர்களே!
முல்லைப் பெரியாறு என்பது முடிந்துபோன ஒன்று. கடந்த ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், அவர்களுடன் திமுக கூட்டாளியாக இருந்த சமயங்களில் எல்லாம் எதைப் பற்றியும் பேசியதில்லை. எந்த உரிமைப் பிரச்சினைகளையும் மாமன்றத்தில் கொண்டுவந்ததும் இல்லை.
கருணாநிதி ஒரே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். 1996-க்குப் பிறகு கருணாநிதி மத்திய அரசில் பங்கெடுப்பதை அட்சய பாத்திரத்தைக் கைப்பற்றுவதாகவே கருதினார். அப்படியே செயல்பட்டார்.
காங்கிரஸ் இட ஒதுக்கீடு விஷயங்களில் என்ன சாதித்தது? ஓபிசி இட ஒதுக்கீடு ஏன் இத்தனை ஆண்டு காலம் தாமதம் ஆனது? இந்தியாவை நேரிடையாகவும் மறைமுகமாகவும் அரை நூற்றாண்டு காலம் ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக 17 ஆண்டுகள் அதிகாரத்தைச் சுவைத்து தமிழகம் என்ன பெருமை அடைந்தது?
அடுத்த 100 ஆண்டுகள் இந்தியர்கள் மனத்தில் மோடி
இந்தியர்கள் 'பொது சுகாதாரம்' என்ற சொல்லையே 2014 மோடி ஆட்சிக்கு வந்த பின்புதானே உணரத் தொடங்கினார்கள். உங்களுக்கு கும்மிடிப்பூண்டி தாண்டி என்ன நடக்கின்றது என்பதே தெரியாது? காரணம் மொழி அரசியல், பிரதேச அரசியல். சமூக நீதி என்ற பெயரில் சாதீய அரசியல் என்று தமிழர்களை எக்காரணம் கொண்டு வளர்ந்துவிடவே கூடாது என்று திட்டமிட்டுத் திருட்டுத்தனம் செய்துகொண்டிருப்பது இனியும் நடக்காது. நடக்கவும்விட மாட்டோம்.
கருணாநிதி இருந்தவரை சமூகநீதிக் காவலராக வேடம் தரித்துப் பொய்யும் புனைச் சுருட்டுமாக கதை வசனம் எழுதி தமிழர்களை நம்பவைத்துக் கொண்டிருந்ததை இன்று நீங்கள் கையில் எடுத்திருப்பது வருத்தமாக உள்ளது. 'காலத்திற்குத் தேவைப்படாத அனைத்தும் காலாவதியாகிப் போகும்' என்பதனை அறியாதவரா நீங்கள்?
ஆர்ப்பாட்டம் இல்லாமல், அவசரப்படாமல், பாரபட்சமின்றி, மத பாகுபாடின்றி உள்கட்டமைப்பு வசதிகள் முதல் சமூக நீதிக்கான அடித்தளம் வரை அனைத்தையும் கடந்த ஏழு ஆண்டுகளில் மிகச் சிறப்பாக வடிவமைத்த மோடியை அடுத்த 100 ஆண்டுகள் இந்தியர்கள் தங்கள் மனத்தில் வைத்திருப்பார்கள்.
மகனின் பட்டாபிஷேகமும், தேசிய தலைவர்களும்
இதுவே இன்று எதிர்க்கட்சியினருக்கு உறுத்தலாக உள்ளது. நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் இந்தியாவைப் பின்னுக்கு இழுக்கக்கூடிய அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றார்கள்.