இந்தியா முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 34 மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 1200க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றளவில் உள்ள மக்கள் கணக்கெடுக்கப்பட்டு, அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியில் செல்லவோ, வெளியாட்கள் யாரும் உள்ளே வரவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்கள் செய்தாலும், நோயாளிகளின் பகுதிகளை வரையறுப்பது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.
எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொலை உணர்வு மையத்தின் மூலம் கணக்கெடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருக்கள், வீடுகள் உள்ளிட்ட புவியியல் வரைபடம் சேட்டிலைட் மூலம் தயார் நிலையில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி நோய் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் பகுதியைச் சுற்றி எந்தெந்த தெருக்கள் வருகின்றன, எத்தனை வீடுகள் இருக்கின்றன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயார் செய்து அளிக்கின்றனர். அதனடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் பாதுகாக்கப்பட்ட பகுதியினை வரையறை செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.