தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீர்மிகு அந்தஸ்து கேட்ட தமிழ்நாடு அரசின் கடிதத்தை வெளியிட்ட சூரப்பா! - சிறப்பு அந்தஸ்து

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி வழங்கும் மத்திய அரசின் முடிவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகத் தெரிவித்த துணைவேந்தர் சூரப்பா, அக்கடிதத்தையும் வெளியிட்டார்.

chancellor
chancellor

By

Published : Oct 12, 2020, 6:53 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி வழங்கக்கோரி மத்திய அரசிற்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக சர்ச்சை வெளியான நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் வர, மத்திய அரசு சில பல்கலைக் கழகங்களைத் தேர்வுசெய்தது.

அதில், 2014-15ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் சீர்மிகு பல்கலைக்கழகம் துவங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட அண்ணா பல்கலைக்கழமும் தேர்வுசெய்யப்பட்டது.

2017ஆம் ஆண்டு உயர் கல்வித் துறைச் செயலராக இருந்த சுனில் பாலிவால் தலைமையிலான நிர்வாகக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை, வருங்கால செலவினம் ஆகியவற்றைத் தயாரித்து, மாநில அரசின் அனுமதியுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அளித்துள்ளது.

2018ஆம் ஆண்டு நான் பதவியேற்ற பின், பல்கலைக்கழகத்திற்குச் சீர்மிகு அந்தஸ்து அளிக்கும் குழுவின் தலைவர் கோபால்சாமி குழு முன் விளக்கம் அளித்தேன். அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சீர்மிகு அந்தஸ்து அளிக்க ஒப்புதல் அளித்தனர்.

நிதி ஒப்புதலுக்கு மாநில அரசின் ஒப்புதல் கடிதம் தேவை என்பதால், தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் குழு முன் 5 முறை விளக்கம் அளித்துள்ளேன். மேலும், முதலமைச்சரையும் சந்தித்து விளக்கம் அளித்தேன். அப்போது தமிழ்நாடு அரசுக்கு அளித்த விவரங்களையே, மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்.

சிறப்பு அந்தஸ்தை ஏற்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில் தற்போது ஏன் ஏற்கவில்லை என்பது எனக்குத் தெரியாது. அரசுக்குத் தெரியாமல் எந்தவித கடித பரிமாற்றத்தையும் நான் மேற்கொள்ளவில்லை.

சீர்மிகு அந்தஸ்து கேட்ட தமிழ்நாடு அரசின் கடிதத்தை வெளியிட்ட சூரப்பா!

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது எனக் கடிதம் வாயிலாக, தமிழ்நாடு அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சிறப்புத் தகுதியை தமிழ்நாடு அரசு ஏன் ஏற்கவில்லை எனத் தெரியவில்லை“ என்று கூறினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சீர்மிகு அந்தஸ்தை ஏற்பதாக மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்களிடம் எடுத்துக் காட்டிய சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் உயரும் எனவும், இது தொடர்பாக தனக்கோ, அரசுக்கோ, அமைச்சருக்கோ இடையே எவ்வித பிரச்சனையும் இல்லை எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'துணைவேந்தர் சூரப்பாவுடன் துணை நிற்போம்!'

ABOUT THE AUTHOR

...view details