சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான முடிவு, இன்று நடக்கும் ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் எனப்படும், ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று(செப். 28) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் சிண்டிகேட் கூட்டமாகும்.
கடந்த காலத்தில் இருந்த சிக்கல்
மேலும், முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, அரசு நிர்வாகத்திற்கு இடையே இருந்த சூழல் காரணமாக அரசு சார்பில் நியமனம் செய்யப்படும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தனர்.
இதனால் ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் சிக்கல் இருந்தது. வழக்கமானப் பணிகளைத் தவிர பிற பணிகளுக்கு அரசு சார்பில் அனுமதி வழங்காமல் இருந்தனர்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து அறிக்கை அளிக்க ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கை
அந்த அறிக்கையில் முக்கியமாக பல்கலைக்கழகத்தில் பணியாளர்களை தொகுப்பூதிய, தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யக் கூடாது எனவும் அது நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள்?
பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர் எனவும், இன்று நடக்கும் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட இருக்கிறது எனவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோன்று, அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டதற்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட இருப்பதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது குறித்தும், அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கியும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தற்காலிகப் பணியாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின் போது அண்ணா பல்கலைக்கழகம், அரசுப் பொறியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஏராளமான பணியாளர்கள், ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிநிரந்தரம் என்ற தகவல் வெளியாகி இருப்பதால், பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தற்காலிகப் பணியாளர்கள், மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தின் முடிவுகளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க:அண்ணா பல்கலை., ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்