தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டு - அடுத்த வாரம் தொடங்கும் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழகத்தின் அலுவலர்களிடம் அடுத்த வாரம் முதல் விசாரணை நடத்தப்படும் எனத் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்துவரும் விசாரணைக் குழுவின் அலுவலர் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக் குழுவின் கால அவகாசத்தை 3 மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

anna university soorappa enquiry time extended
anna university soorappa enquiry time extended

By

Published : Feb 22, 2021, 10:12 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் விசாரணைக் குழுவின் கால அவகாசத்தை 3 மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கான கால அவகாசம் பிப்.11ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விசாரணை ஆணையத்தை மேலும் 3 மாத காலம் நீட்டிக்க வேண்டுமென ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்கவேண்டுமென நீதிபதி கலையரசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இச்சூழலில் நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவின் விசாரணைக் காலத்தைக் கூடுதலாக 3 மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் அண்ணா பல்கலைக்கழக அலுவலர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, அடுத்த வாரம் முதல் விசாரணை நடத்தப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து துணைவேந்தர் சூரப்பாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படும் என விசாரணை அலுவலர் கலையரசன் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல், முறைகேடாக நியமனங்கள், தனது மகளை விதிகளை மீறி நியமனம் உள்ளிட்ட முறைகேடு குறித்த புகார்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்தன.

இதனைத்தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனை விசாரணை அலுவலராக நியமித்து 2020ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அரசு உத்தரவிட்டது. துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை அலுவலகம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் விசாரணை ஆணையத்திற்கு வந்த புகார்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து தேவையான ஆவணங்களைப் பெற்று விசாரணை செய்யப்பட்டுவருகிறது. அண்ணா பல்கலை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், முக்கியமான பல ஆவணங்கள் மறைக்கப்பட்டு மீதமுள்ள ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், புகார் அளித்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details