அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக். பயோடெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என்ற அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டிருந்தது. தமிழக அரசின் 69% இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தித்ததால், 2020-21ஆம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மாணவர் சேர்க்கையை தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகம், மத்திய அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளித்து 3 இடங்களை ஒதுக்கி இருந்தது. இதை எதிர்த்து, நீதிபதி புகழேந்தி முன்பு தமிழக அரசு முறையீடு செய்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத இட ஒதுக்கீடு பின்பற்றப் படுவதாக முறையிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைகழகம் எவ்வாறு செயல்பட முடியும் என கேள்வி எழுப்பினார். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எதிராக செயல்பட்டால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து, இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்றும், எந்த ஒரு மாணவர் சேர்க்கையும் நடத்தவில்லை என்றும் விளக்கமளித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், பழைய இட ஒதுக்கீட்டையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர்கள் தொகுதிக்கு செய்வது சட்ட விரோதமாகாது! - உயர் நீதிமன்றம்