சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் இணையதளம் வாயிலாக இளநிலை, முதுகலை ஆகிய படிப்புகளுக்கான இறுதியாண்டின் இறுதிப் பருவத் தேர்வினை செப்டம்பர் 24 முதல் 29 வரை பல்கலைக்கழகம் நடத்தியது. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் coe1.annauniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக நடைபெற்ற தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்தும், சில மாணவர்கள் விடைகளை கேட்டும், தேனீர் கடைகளில் அமர்ந்து கொண்டும் தேர்வுக்குரிய முறைகளில் தேர்வை எழுதவில்லை என்று புகார் எழுந்தது. இந்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்த இறுதிப் பருவத் தேர்வினை எழுத அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்பட ஒரு லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் எழுதுவதற்கு விண்ணப்பித்தனர்.
இறுதிப் பருவத் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு, ஒவ்வொருப் பாடப்பிரிவிலும் தேர்வு எழுதும் பாடத்தாள்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு மாணவருக்கும் மாறுபடும்.