இந்தியா முழுவதும் உள்ள 10 தனியார் பல்கலைக்கழகம் மற்றும் 10 அரசு பல்கலைக் கழகங்களுக்கு சீர்மிகு கல்வி நிலையங்கள் என்ற சிறப்பை வழங்கி பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, வேலூரில் உள்ள விஐடி ஆகியவை தமிழ்நாட்டில் இருந்து இடம் பெற்றுள்ளன. இதனால் சர்வதேச பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் ஆராய்ச்சி மூலம் இடம்பெற முடியும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை கருதுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் ரூ.1000 கோடி நிதி உதவியும் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீடு பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து முடிவெடுப்பதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், தங்கமணி, கே.பி.அன்பழகன்,சி,வி.சண்முகம் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் இரண்டாவது கூட்டம், ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் ஏற்படும் சாதகங்கள், பாதகங்கள் குறித்து விளக்கப்பட்டன. அப்போது அரசு பல சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும் என பல்கலைக்கழத்திற்கு உத்தரவிட்டது.