சென்னை: அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டண வசூலில் முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அகில இந்திய தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு நிறுவனர் கார்த்திக், தமிழ்நாடு முதலமைச்சருக்கு இணையம் வாயிலாக அனுப்பியுள்ள புகார் மனுவில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் பல லட்சம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மாணவரின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு தேர்வு விலக்கு அளித்ததை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை உள்ளது.
அவ்வாறு 100 கோடி ரூபாய்க்கு மேல் தேர்வுக்கட்டணம் வசூல் செய்தது சரி என்றால், சுமார் 50,000 ஆசிரியர்களுக்கு தேர்வின் ஆய்வாளர் படி, தேர்வு நடத்துனர் படி, விடைத்தாள் திருத்தும் படி, வினாத்தாள் - விடைத்தாள் உருவாக்கும் படி போன்றவை ஏன் வழங்கப்படவில்லை.
கடந்த பருவத் தேர்வு விடைத்தாள் திருத்தத்திற்கு சுமார் 20,000 ஆசிரியருக்கு 10 விழுக்காடு வருமான வரி பிடித்தம் செய்த பல்கலைக்கழகம், இந்த பருவத் தேர்வுக்கு மேலேயுள்ள எந்த படிகளையும் வழங்காமல் சுமார் 50 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டது.
மேலும் ஆய்வே நடக்தாமல் 8000 ஆராய்ச்சி மாணவரிடம் பருவத் தேர்விற்கான கட்டண வசூல், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி 60 விழுக்காடு கட்டண விலக்கு அளிக்காமல், சுமார் 3000 பல்கலைக்கழக மாணவருக்கு கட்டணம் வசூல் என்று அண்ணா பல்கலைக்கழகம்முறைகேடான வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது.
இந்த முறைகேடுகளை உடனே களைய வேண்டும். மேலும், துணை வேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தை திறம்பட நடத்த இயலவில்லை என்பதால் அவரை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.