பெரும்பாலான வீடுகளில் காவலுக்கு மட்டுமல்லாமல் உற்றத் தோழனாகவும் வளர்ந்து வருபவை நாய்கள். இவை மட்டுமல்லாமல் பறவைகள், முயல்கள் உள்ளிட்டவையும் வீடுகளில் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இதனால் செல்லப்பிராணிகள் விற்பனை லாபம் நிறைந்த தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செல்லப்பிராணிகள் விற்பனையகங்கள் மாநில விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.
வணிகத்திற்காக வரைமுறையில்லாமல், ரத்த சோதனை செய்யாமல், நிறைய குட்டிகள் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விலையுயர் நாய்கள் இனப்பெருக்கத்திற்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்படும் நாய்க்குட்டிகள் நாளடைவில் நோய்வாய்ப்பட்டு அதன் உரிமையாளர்களாலேயே தெருவில் விடப்படக்கூடிய அவலமும் நிகழ்கிறது. இவ்வாறான நாய்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவை பெசன்ட் நகர் காப்பகத்தில் பராமரிக்கப்படுவதாகக் கூறும் விலங்குகள் நல ஆர்வலர் ஷர்வன் கிருஷ்ணன், அரசின் இந்த அறிவிப்பினால் வீட்டு விலங்குகள் காக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.