இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 91.30% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.57 சதவிகிதமும், மாணவிகள் 93.64 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற, சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதங்களைப் பார்க்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் 95.37% தேர்ச்சியுடன் முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டத்தை திருப்பூர் மாவட்டம் விஞ்சியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். ஆனால், கடைசி இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் வரிசையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.