இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் தனியார் குடிப்பகங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்பட முனைவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 5,198 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் 2,050 மதுக்கடைகளுடன் குடிப்பகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆளுங்கட்சி புள்ளிகளால் குடிப்பகங்கள்
அதிகாரப்பூர்வமாக 2,050 குடிப்பகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, அனைத்து மதுக்கடைகளிலும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் குடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய குடிப்பகங்கள் பொதுவாக ஆளுங்கட்சி புள்ளிகளால் நடத்தப்பட்டு வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியமாகும்.
இத்தகைய சூழலில் தான் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட குடிப்பகங்களை மூடி விட்டு, வேறு இடங்களில் தனியார் மூலம் குடிப்பகங்களைத் திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக டாஸ்மாக் அலுவலர் ஒருவரை மேற்கோள் காட்டி பத்திரிகையில் செய்தி வெளியானது. அரசுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் நோக்கத்துடன் இத்தகைய திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீமைக்கு முடிவு கட்ட வேண்டும்
தனியார் குடிப்பகங்களைத் திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது உண்மை என்றால், அது மிகவும் ஆபத்தானதாகும். தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களின் வீழ்ச்சிக்கும், பல்லாயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரப் பெண்கள் கணவர்களை இழந்து கைம்பெண்களாக வாடுவதற்கும் முதன்மைக் காரணமாக இருப்பது மதுக்கடைகள் தான்.
இந்தத் தீமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் போராடி வருகிறார்கள். பாமக மேற்கொண்ட சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டங்களால் தமிழ்நாட்டில் 4000க்கும் கூடுதலான மதுக்கடைகள் மூடப்பட்டது வரலாறு ஆகும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் காரணமாக, மதுவுக்கு எதிராகப் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
அந்த எழுச்சி காரணமாகத் தான் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன் மதுவிலக்கை ரத்து செய்த கட்சியான திமுக, கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது.