இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் மழைக்கால பருவப் படிப்புகளில் சேர தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இறுதி பருவத் தேர்வு இல்லாமல், அதற்கு முந்தைய பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு மாணவர் சேர்க்கை கிடைத்துள்ளது.
அவர்கள் முதல் பருவத்திற்கான கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தி விட்டனர். அக்டோபர் பிற்பகுதியில் வகுப்புகள் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர்கள் இறுதி பருவத் தேர்வுகளில் வெற்றி பெற்று, தற்காலிக பட்டச் சான்றிதழ்களை (Provisional Certificate) தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு விடும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதி பருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன. பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் இம்மாத இறுதிக்குள்ளாகவும், சில பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதத் தொடக்கத்திலும் இறுதி பருவத் தேர்வுகள் நிறைவடைய உள்ளன.
இந்தத் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம் அமையும்.
ஒருவேளை அக்டோபர் 5ஆம் தேதிக்குள் தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பட்டியலிட முடியாதவையாகும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர்கள் நடப்பு பருவத்தில் சேரத் தவறினால் ஓராண்டு படிப்பை இழக்க நேரிடும்.