சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (ஏப்ரல் 8) பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். அதன்படி 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவுடன் முதலைச்சர் ஸ்டாலினை சந்தித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கடிதத்தை கொடுத்துள்ளோம். அதில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டுகோள்விடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு வார காலத்தில், இந்த புள்ளி விவரங்களை சேகரிக்க முடியும்.