தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒன்றிய அரசின் ஹைட்ரோகார்பன் ஏலம்: ஸ்டாலின் நிலைப்பாடுக்கு அன்புமணி வரவேற்பு! - mk stalin

ஸ்டாலினின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இந்த உறுதியை செயலிலும் காட்டி, காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்க வேண்டும்.

Anbumani Ramadoss
Anbumani Ramadoss

By

Published : Jun 14, 2021, 12:17 PM IST

சென்னை: ஒன்றிய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ஏலம் விட்டிருப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம், கரு வடதெரு கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் வகையிலான எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது.

மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு புரிந்து நடக்க வேண்டும்:

இந்தியா முழுவதும் ஹைட்ரோகார்பன் வளங்களை கண்டறிந்து எடுக்கும் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை இரு சுற்றுகளாக பல்வேறு ஹைட்ரோகார்பன் தொகுப்புகள் ஏலத்தில் விடப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது சுற்றில் மொத்தம் 9 படுகைகளில் 13,000 சதுர கிலோ மீட்டருக்கும் கூடுதலான பரப்பளவில் அமைந்துள்ள 75 இடங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்காக 32 ஒப்பந்த உரிமங்களை வழங்குவதற்கான ஏல நடைமுறை கடந்த 10-ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கரு வடதெரு கிராமத்தில் அமைந்துள்ள ஹைட்ரோகார்பன் வயலும் ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரு நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு புரிந்து கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் விருப்பத்திற்கு எதிராக அரசு செயல்படக்கூடாது:

தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள ஹைட்ரோகார்பன் வளங்களை ஏலத்தில் விடுவதற்கு முன் ஒன்றிய அரசு இரு முறை யோசித்திருக்க வேண்டும்; மாநில அரசுடன் கலந்தாய்வு நடத்தியிருக்க வேண்டும். ஜனநாயகம் என்பதே மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி முறைதான் என்பதால், மக்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் அரசுகள் செய்யக்கூடாது.

பாமகவின் போராட்டம்:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியான போது, அதை முதன்முதலில் கண்டித்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அத்திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்கள் நடத்திய போராட்டத்தில் நானே நேரில் சென்று கலந்து கொண்டதுடன், பா.ம.க. சார்பில் நெடுவாசலில் தனியாகவும் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து தான் அத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டது.

அதன்பிறகும் கூட தமிழ்நாடு மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு ஏலங்களை நடத்தியும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 7264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த 5 உரிமங்களை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இத்திட்டங்களை செயல்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், இனிவரும் காலங்களில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைத் தடுக்க காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதை சாத்தியமாக்கி வெற்றியும் பெற்றது.

விவசாயிகள் அச்சம்:

காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாலும், தமிழ்நாடு மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாகவும் தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஹைட்ரோகார்பன் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இத்தகைய சூழலில் புதிதாக மீண்டும் ஒரு திட்டத்தை அறிவித்து, ஏலம் நடத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது விவசாயிகளிடம் ஒருவித அச்சத்தையும், மக்களிடம் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையை ஒன்றிய அரசும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது அரசாணையையும், காவிரி படுகை மக்களின் உணர்வுகளையும் மதித்து புதிதாக எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் ஒன்றிய அரசு அறிவிக்காமல் இருந்திருக்க வேண்டும். அது தான் அரசியலமைப்பு சட்டப்படியான மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு மதிப்பதாகும்.

ஸ்டாலின் நிலைப்பாடுக்கு வரவேற்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அத்தகைய திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளார். அவரது இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இந்த உறுதியை செயலிலும் காட்டி, காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய அரசும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, ஏலம் விடப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்கள் பட்டியலில் இருந்து வடதெரு திட்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ABOUT THE AUTHOR

...view details