தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2019, 1:57 PM IST

ETV Bharat / city

'காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்துக!' - எம்.பி. அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி கலந்துகொண்டு மாணவிகள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.

அப்போது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். 150 ஆண்டுகளில் புவியின் வெப்பம் ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளதாக கூறிய அவர், தற்போது நாம் பார்க்கும் பெருமழை, வெள்ளம், இயற்கை பாதிப்புகள் என அனைத்தும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளே என்றார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐநா சபையில் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகச் சொன்ன அன்புமணி, அதைப்போல் நாமும் பருவநிலை மாற்றம் தொடர்பாக பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதற்காக குழுக்கள் அமைத்து செயல்பட்டு, பருவநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த அரசை நிர்பந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசு காலநிலை அவசர நிலையை பிரகடனம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் தொழில் புரட்சிக்குப் பிறகு உலக வெப்பம் ஒரு டிகிரி உயர்ந்துள்ளதால் இயற்கை பேரிடர்களை நாம் சந்தித்துக் கொண்டிருப்பதாக எச்சரித்த அவர், சென்னையில் பெருவெள்ளம் கஜா புயல் ஓக்கி புயல் வர்தா புயல் என பல்வேறு இயற்கைப் பேரிடர்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வெள்ளம் தற்போது ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது என ஐநா சபை சொல்லியதை சுட்டிக்காட்டிய அன்புமணி காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் நேரிடுவதாகவும் கவலை தெரிவித்தார்.

2030க்குள் நிலத்திலிருந்து எடுக்கப்படும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த அறிவுறுத்திய அன்புமணி, வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் பொது போக்குவரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

சோதனை முறையில் சென்னை முழுவதும் இலவச மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரை தான் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தனது நோக்கம் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் மரக்கன்று நட விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மரம் நடுவது மிகவும் நல்ல விஷயம்; ஆனால் அதற்கு பொதுமக்களிடமிருந்து பணம் வாங்காமல் செயல்பட்டால் மிகவும் நன்று என்றார்.

இதையும் படிங்க:

#GretaThunberg: கிரேட்டாவின் பேச்சை பாராட்டிய ஹிட்மேன் ரோகித்!

ABOUT THE AUTHOR

...view details