சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள நாராயணசாமி தோட்டத்தில் செவிலியர் தங்கும் விடுதி உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சரத்(21) அந்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அப்போது, விடுதியின் மேல் தளத்திற்குச் சென்ற அவர், அங்கு அறையிலிருந்த பணத்தை திருட முற்பட்டதோடு, தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் தவறாகவும் நடக்க முயன்றுள்ளார். அவரின் சத்தம் கேட்டு விழித்த அறையில் இருந்த மற்ற பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.
இதில் பதறிப்போன சரத், கையில் கிடைத்த பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று, சாலையில் உள்ள நடைபாதையில் படுத்து உறங்குவதுபோல் நடித்துள்ளார். இதனையடுத்து விடுதி காப்பாளர் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அபிராமபுரம் காவல்துறையினர், விடுதியின் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
சிசிடிவி காட்சியில் பதிவான இளைஞர் அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடைபாதையில் படுத்திருந்த சரத்தை அழைத்து விசாரித்தனர். அப்போது அவரிடம் கைப்பை ஒன்று இருக்கவே காவல்துறையினர் அவரை அழைத்து வந்து பெண்கள் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஒப்பிட்டு பார்த்தப்போது அது சரத் தான் என்பது உறுதி செய்யப்படவே, அவரை கைது செய்த காவல்துறையினர், சம்பவம் தொர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.