அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. அதிமுகவிலிருந்து விலகிய தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி சட்டமன்ற இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல், ஊராட்சி, உள்ளாட்சித் தேர்தல், என போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.
அதிமுகவுக்கு மாற்று அமமுக தான் என்ற நிலையை உருவாக்க கடந்த மூன்று ஆண்டுகளாக தினகரன் போராடி மக்களிடத்தில் தன் கட்சியை கொண்டு சேர்கிறார்.
இசக்கி சுப்பையா, தினகரன் கட்சியை ஆரம்பிக்கும்போது அவருக்கு ஆதரவாக இருந்தார். பின்பு தனக்கு சொந்தமான சென்னையில் அசோக் நகரில் உள்ள இடத்தை அமமுக தலைமை அலுவலகம் அமைத்துக்கொள்ள உதவினார்.
சிறிது கால இடைவெளியில் இசக்கி சுப்பையா அதிமுகவில் கட்சித்தாவல் செய்தார். இதன் காரணமாக இங்கு இயங்கி வந்த அமமுக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய பொறுப்பு தினகரனுக்கு ஏற்பட்டது.
இதற்காக புதிய இடங்களை தேடி அவர் இறுதியாக ராயப்பேட்டை பகுதியை தேர்ந்தெடுத்தார். இந்நிலையில் ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் புதிய அதி நவீன வசதிகள் கொண்டதாக இருக்கும் வகையில், இணையம், தொலைபேசி, உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களின் படங்கள் அதன் முகப்பில் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பதிக்க புதிய அலுவலத்தில் இருந்து பணியை தொடங்க உள்ளார். வெளியூர் சுற்று பயணத்தை தவிர்த்து, தினந்தோறும் புதிய அலுவலகத்திற்கு தினகரன் வருகை தந்து, தொண்டர்களை, மாவட்ட செயலாளரை சந்திக்கிறார்.
புதிய தலைமையகம் திறப்பு விழாவை முன்னிட்டு அப்பகுதியில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:LIVE: அரசியலில் ரஜினி? - இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு