தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவை விட மோசமாக இருக்கிறது அரசு - டிடிவி தினகரன் கடும் தாக்கு - கரோனா

சென்னை: கரோனா பரிசோதனைக்கு போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதல் போன்ற மக்களை பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran
ttv dinakaran

By

Published : Jun 12, 2020, 6:08 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா பாதிப்பு நாளும் உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில், சென்னையில் வீடுதோறும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் கரோனா பரிசோதனைக்கு சென்றாலே சோதனை செய்து கொள்பவரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் அறிவிப்பு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய அறிவிப்பின் படி, சோதனையில் நோய் இல்லை என்று வந்தாலும் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஆணையர் சொல்கிறாரா? இதைக் கேட்ட பிறகு நோய் இருக்கலாமோ எனச் சந்தேகப்படுபவர்கள் கூட தாங்களாக சென்று எப்படி சோதனை செய்துகொள்வார்கள்? அரசின் வசம் கரோனா பரிசோதனைக் கருவிகள் குறைவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வரும் நிலையில், பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியா இது? என்ற சந்தேகமும் எழுகிறது.

முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், 'தினசரி பேட்டி' அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், சிறப்புக் கண்காணிப்பு செய்ய தனித்தனியாக அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையர் என இத்தனை பேரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆளுக்கொன்றாக பேசியும், செயல்பட்டும், அவரவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிட்டும் கரோனாவை விட மோசமாக மக்களை இம்சித்து வருகிறார்கள்.

மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அமைச்சர்களும், அலுவலர்களும் தனித்தனி ஆவர்த்தனங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதைவிட முக்கியமாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே மக்களுக்கான அறிவிப்புகள் வெளியாக வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: உலகத்திலேயே கேவலமாக ஊரடங்கை அமல்படுத்தியது தமிழ்நாடு அரசுதான் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details