அதிமுக கிளைச் செயலாளர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மோளையனூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். 1980ஆம் ஆண்டு, அதிமுக கிளைச் செயலராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய பழனியப்பன் அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை மொரப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
டிடிவி தினகரன் அணி
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களில் பழனியப்பனும் ஒருவர். அதையடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதேபோல 2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலிலும் அமமுக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து பழனியப்பன் திமுகவில் இணைவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, தர்மபுரி மாவட்டத்தில் திமுக 5 தொகுதிகளிலும் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவியது.
திமுகவில் இணைந்தார்
அதனால், தர்மபுரியில் திமுகவை பலப்படுத்த பழனியப்பனை திமுகவில் இணைக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர முயற்சி செய்வதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பழனியப்பன் இன்று (ஜூலை 3) திமுகவில் இணைந்தார்.
அவருடன் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் செயலாளர்கள் என பலர் திமுகவில் இணைந்தனர். இதனிடையே, தர்மபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், அரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் பழனியப்பன்போல திமுகவில் இணைவார்களா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்