சென்னை:தமிழ்நாட்டில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும் என்ற திமுக அரசின் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் 2,000 மினி கிளினிக்குகள் மூடப்படும் என்று ஈடிவி பாரத் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்த நிலையில் திமுக அரசு பதவியேற்ற ஏழு மாதங்களில் அதற்கான அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” எனக் கூறியிருந்தார்.
இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் தன் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.