உலகளவில் தற்போது பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திவரும் கரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பள்ளிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்திருந்தது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 'மக்கள் ஊரடங்கு' உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அதனை நாளை காலை ஐந்து மணி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசின் உத்தரவுகளை மீறி 10,11,12ஆம் மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்தியது. இதனால் மாணவர்கள் பதற்றத்துடனும், பயத்துடனும் பள்ளிக்கு வந்து சென்றனர்.
அரசின் உத்தரவுகளை மதிக்காத தனியார் பள்ளி... நடவடிக்கை எடுக்கப்படுமா? மேலும் பெற்றோர்கள், பள்ளியின் இத்தகைய நடவடிக்கையால் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கல்வி அலுவலரிடம் கேட்டபொழுது தனியார் பள்ளி அரசின் உத்தரவை மீறி பள்ளியை நடத்தியது குறித்து விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.