சென்னை:அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாப்பி, லசாடா, போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், மூன்றாயிரம் ரூபாய் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி தற்போது வலம் வந்துகொண்டிருக்கிறது. அதிலிருக்கும் லிங்கை அழுத்தினால் உடனடியாக ஹனி (honey), மேக்கிங்(making) ஆகிய செயலிகள் பதிவிறக்கம் ஆகின்றன.
பின்னர், வாட்ஸ்அப் மூலமாகப் பொதுமக்களைத் தொடர்புகொண்டு, அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி அதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனை நம்பிய மக்களும் மோசடி கும்பல் கூறுவதைக் கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
வேலைவாய்ப்பு இருப்பதாக வரும் போலி செய்தி அமேசான் மோசடி கும்பல்
முதற்கட்டமாக அந்தச் செயலியில் போனஸ் தொகையாக 101 ரூபாயை மோசடி கும்பல் அனுப்பி, அந்த ஆப் மூலமாக குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறுகிறார்கள். அதற்கான தரகுத் தொகையும் பயனாளருக்கு கிடைக்கும் என நம்பவைக்கின்றனர்.
இதனை நம்பிய பொதுமக்களும் அந்த மோசடி கும்பல் கொடுக்கும் வங்கிக் கணக்கிற்கு பணத்தைச் செலுத்தி, பொருளை வாங்கி விற்கின்றனர். பின்னர், அந்த மோசடி கும்பல் கூறியதுபோல பயனாளரின் செயலியில் தரகுத் தொகை சேர்கிறது. ஆனால், அந்தப் பணத்தைப் பயனாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியவில்லை.
மூளைச் சலவை செய்யும் கும்பல்
மேலும், இது குறித்து அவர்களிடம் கேட்டால், தாங்கள் கொடுக்கும் பணியை முழுவதுமாக முடித்தால் மட்டுமே தங்களது வங்கிக் கணக்கிற்கு பணம் வரும் என நம்பவைக்கின்றனர். ஆனால், எந்த ஒரு பணம் வங்கிக் கணக்கிற்குச் செல்லாது என்பது கடைசியில்தான் தெரியவருகிறது.
இந்த வகையில் ஒரு கும்பல் தங்களது மோசடி வேலைகளைக் காண்பித்துவரும் வேலையில் இதேபோல் வேறு ஒரு அமேசான் மோசடி கும்பல், ஆரம்பத்தில் பொதுமக்களுக்குப் பணம் கொடுப்பதுபோல கொடுத்துவிட்டு, பின்னர் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை காட்டி பணத்தை மோசடி செய்துவருகின்றனர்.
காவல் துறை எச்சரிக்கை
இந்த மோசடி கும்பலிடம் பொதுமக்கள் பலரும் சிக்கி தங்களது பணத்தை இழந்துவருகின்றனர். சில நாள்களுக்கு முன்பு, கர்ப்பிணி ஒருத்தர் தனது அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை முதலீடு செய்து, ஏமாற்றப்பட்டார். இது தொடர்பாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்துவருகின்றனர்.
ஃபிளிப்கார்ட் குறுஞ்செய்தி இதனால், பொதுமக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்க வேண்டாம் எனவும் உடனடியாக ஹனி, மேக்கிங் என்ற செயலியை செல்போனிலிருந்து அழிக்குமாறும் சென்னை காவல் துறை, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிவருகிறது. மேலும், பகுதி நேர வேலை இருப்பதாக வரக்கூடிய குறுஞ்செய்தி லிங்கை யாரும் தொட வேண்டாம் எனவும் சென்னை காவல் துறையினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 2.63 கோடி ரூபாய் பண மோசடி - அரசு பள்ளி ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது!