தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாற்றுத்திறனாளி பெண்கள், குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டத்துக்கு வைப்பு நிதி ஒதுக்கீடு!

சென்னை: மாற்றுத்திறனாளி பெண்கள், குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டத்துக்கு வைப்பு நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

By

Published : Mar 23, 2020, 1:10 PM IST

cm_assembly
cm_assembly

இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது,

மன வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச் சிதைவு நோய், பல்வகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிகிச்சை அளிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் செவித்திறன் குறை உடையோருக்கு கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் 1.31 ஏக்கர் நிலம் வழங்கி, 6.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி வசதியுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும்.

பாலியல் வன்கொடுமை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப்பட்டு, வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளி பெண்கள், குழந்தைகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்க ஏதுவாக, “மாற்றுத்திறனாளி பெண்கள், குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டம்-2020”-க்கான நிதியம், ஐந்து கோடி ரூபாய் வைப்பீட்டுடன் உருவாக்கப்படும் .

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ், சிறுபான்மையினர் அதிகமாக வாழும் கூடலூர், மணமேல்குடி, திருவாடனை, மண்டபம் ஆகிய 4 வட்டாரங்களிலும், வேலூர், பேர்ணாம்பட்டு, மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல், பள்ளப்பட்டி, நாகப்பட்டினம், கீழக்கரை, தூத்துக்குடி, காயல்பட்டிணம், கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, கொல்லங்கோடு, நாகர்கோவில், குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய 18 பகுதிகளிலும் சமுதாயக் கூடம் அமைத்தல், நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை கட்டுதல், புது அரசு மேல்நிலைப் பள்ளிகள் கட்டுதல், தொழிற் பயிற்சி நிலையம் அமைத்தல், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான விடுதிகள் கட்டுதல், மதராசா பள்ளிகளுக்கு இணைய வசதியுடன் கூடிய கணினிகள் வழங்குதல் போன்ற சிறுபான்மையினருக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் வளர்ப்பு திட்டங்கள், 24.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

இந்தத் துறையின் கீழ் இயங்கி வரும் 1,301 விடுதிகளுக்கு டிடிஎச் இணைப்புடன் எல்இடி தொலைக்காட்சிப் பெட்டிகள், 5 கோடியே 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். இத்துறையின் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 900 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். இது தவிர, பொங்கல், குடியரசு தினம், தமிழ் வருடப் பிறப்பு, சுதந்திர தினம், தீபாவளி ஆகிய பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுக் கட்டணமாக தற்போது பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகை 20 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பிறமலைக் கள்ளர் பள்ளிகளில் பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும். இந்தத் துறையின் கீழ் இயங்கி வரும் 1,354 விடுதிகளில், 1,290 விடுதிகள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இங்கு பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசு 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும். இத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,099 பள்ளி விடுதிகளில் 11 பள்ளி விடுதிகள் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்லூரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

cm assembly

ABOUT THE AUTHOR

...view details