சென்னை : ஓமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான முனையத்தில் செய்யப்படும் பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மா சுப்பிரமணியன் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "புதிதாக உருமாறிய கரோனா அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்டு ஒமிக்கிரான் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது, உலக நாடுகள் ஒமிக்கிரான் வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
மேலும், சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டி பிசிஆர் (RT PCR) பரிசோதனையும், காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக வருபவர்களையும், பல நாடுகளுக்கு சென்று வருபவர்களை கண்காணிக்க உத்தரவுவிட்டுளோம்.
விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் உதவி திட்ட அலுவலர் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் நியமிக்கப்பட உள்ளது. தென் ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 8 நாள்களுக்கு பின் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களையும் கண்காணித்து பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.