சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்துவிட்டு, வாதங்களை முன்வைக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
சென்னை சி.ஐ.டி. நகரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், 'குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டுமென ஆகம விதிகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்துவிட்டால், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்போம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும்
அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்று பேட்டியில் தெரிவித்திருந்தார். இவ்வாறு அமைச்சர் அறிவித்திருப்பது ஆகம விதிகளுக்கு முரணானது.
குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழில் அர்ச்சனை செய்வதும், குறிப்பிட்ட பிரிவினரை தவிர மற்றவர்கள் கருவறைக்குள் செல்வதும் ஆகம விதிகளுக்கு முரணானது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இவற்றில் 500 கோவில்களில் மட்டுமே ஆகம விதிகள் பின்பற்றப்படுவதாகவும், அங்குள்ள நியமனங்களில் ஆகம விதிகளை பின்பற்ற வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.