மதுரை: முன்னாள் முதலமைச்சரும், நெடுங்காலம் திமுக தலைவராக இருந்து மறைந்தவருமான கருணாநிதியின் பிறந்தநாள் நாளை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பெரியாரின் கனவை நிறைவேற்றும் முகமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திருத்தத்தை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி கொண்டுவந்தார்.
வரலாற்றுக்கு குறுக்கே வந்த வழக்கு
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கருணாநிதி உத்தரவின்பேரில் உருவானதே இந்து சமய அறநிலையத் துறையில் பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிப்புத் திருத்தச் சட்டம். இதனை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். சேசம்மாள் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டது சரி; ஆனால் ஆகமத்திற்கு முரணாக வேறு சமூகத்தினர் தொட்டால் சாமி சிலை தீட்டுப்பட்டுவிடும். எனவே ஆகமத்தை மீறக்கூடாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அர்ச்சகர் கனவு நிறைவேறாதா? உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தடை சுமார் 35 ஆண்டுகள் நீடித்தது. இடையில், தமிழ்நாட்டை ஆட்சிசெய்த அதிமுக அரசு அர்ச்சகர் பிரச்சினையில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.
மீண்டும் உயிர்பெற்ற கனவு
2006ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அனைத்து சாதி அர்ச்சகர் அரசாணை வெளியிட்டு 23.05.2006-ஆம் தேதியிட்ட அரசாணை அரசு (நிலை) எண்:118-ஐ வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சாதி அர்ச்சக மாணவர் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்பள்ளிகளில் முறையாக அனைத்து மந்திரங்கள், பூசைகள், ஆகமங்கள், திருமந்திரங்கள் பயின்று தீட்சையும் பெற்று 207 மாணவர்கள் ஆகமக் கோயில்களில் அர்ச்சகப் பணிக்குத் தயாராகினர்.
அதற்கும் தடை வாங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார்கள் பல ஆண்டுகள் வழக்கை நடத்தவில்லை. அதன்பின் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் விருத்தாசலம் ராஜு மதுரை வாஞ்சிநாதன் முயற்சியில் அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டு கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கருவறை நுழைவு எனப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ம.க.இ.க., திராவிடர் கழகம், விசிக, தோழமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு அளித்தன.
2015 தீர்ப்பு
இதன் தொடர்ச்சியாக எங்கள் வழக்கறிஞர்களின் முயற்சியால் உச்ச நீதிமன்ற வழக்கிலும் இணைந்து பல லட்சங்கள் செலவழித்து மூத்த வழக்கறிஞர்களை இணைத்து வழக்காடினோம். 2015-இல் தீர்ப்பு வந்தது. பிறப்பின் அடிப்படையில் யாரும் அர்ச்சகர் வேலை கோர முடியாது என்று சொன்ன உச்ச நீதிமன்றம் அந்தந்த கோயில் மரபுகளின்படி நியமனங்கள் செய்யலாம் என உத்தரவிட்டது. அப்போதிருந்த அதிமுக அரசில் நாங்கள் பலமுறை முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை.
இது அரசுப் பணி
அர்ச்சகர் பணி என்பது ஓர் அரசுப் பணி. அரசு ஊழியர்கள் போல பணிவரன்முறை விதிகளுக்குள் அர்ச்சகர்கள் வருவார்கள். சேசம்மாள் வழக்கு, 2015 அர்ச்சகர் தீர்ப்புகளின் அடிப்படையில் பரம்பரையாகவோ, பிறப்பின் அடிப்படையிலோ தமிழ்நாட்டில் உள்ள ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்யக் கோரி யாரும் கோர முடியாது.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக பரம்பரை அல்லது குறிப்பிட்ட பிராமண சமூகத்தின் ஒரு பிரிவினர் மட்டும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனை மாற்றி கோயில்களில் சமத்துவத்தை நிலை நாட்டுவதே அரசியல் சட்டப்படியான அரசின் பணி. அந்த வகையில், தனது அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்றுவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
கோரிக்கை நிறைவேறுமா
தற்போது தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆகமக் கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை நாளை (ஜுன் 3) கருணாநிதியின் பிறந்த நாளில் அறிவிக்கக் கோருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற மிகப்பெரிய கோயில்களில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில், பழனி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயில், கபாலீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் இது போன்ற பெரிய கோயில்களில் ஆகம முறைப்படி இயங்குகிற கோயில்களிலும் எங்களுக்கு தகுதி திறமையோடு நாங்கள் பயிற்சி முடித்து இன்றைக்கு தனியார் கோயில்களிலும் தனியாக சில வேள்வி குடமுழுக்கு போன்ற அனைத்து வகையான பூஜை முறைகளையும் செய்து வருகிறோம் அதற்கேற்ப எங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
கோரிக்கைகள்
கோயில் கருவறையில் இருக்கும் தீண்டாமையை ஒழிக்க அரசு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே சமூக நீதிக்கான புதிய அரசிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
- அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை ஜூன் 3 2021 அன்று கருணாநிதி பிறந்த நாளில் அறிவிக்கக் கோருகிறோம்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரிய கோயில்கள் - பாடல் பெற்ற தளங்களில், அர்ச்சகர் பயிற்சி முடித்து தகுதி திறமையோடு இருக்கும் 200 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்
- தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள சைவ, வைணவப் பயிற்சி நிலையங்களை இந்து அறநிலைத்துறை மீண்டும் தொடங்க வேண்டும்.
- 2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததினை கணக்கில் கொண்டு இந்த வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட வேண்டும்.
- அர்ச்சகர் பயிற்சி முடித்த 207 மாணவர்கள் அனைவருக்கும் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. பணி நியமனம் கிடைக்கவில்லை. ஊக்கத்தொகை வழங்குமாறு கோருகிறோம்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.
- சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
- அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஐந்து பேர் இறந்து விட்டார்கள். அவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஒரு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #HBD இசைஞானி இளையராஜா: “இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியத்தின் பேரரசன்”