தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு - AK RAJAN COMMITTEE report filing soon

ஏகே ராஜன் குழு
ஏகே ராஜன் குழு

By

Published : Jul 13, 2021, 4:08 PM IST

Updated : Jul 13, 2021, 5:37 PM IST

16:00 July 13

மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் நாளை (ஜூலை 14) தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

நீட் தேர்வினால் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரி செய்யும் வகையிலும், நீட் முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அவற்றின் சட்ட வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. 

4 முறை கூடி அறிக்கை தயாரிப்பு

அதனைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கருத்துகளை பெற்றது. அதில், 86 ஆயிரத்து 342 மனுக்கள் வரப்பெற்றன. 

அந்த மனுக்களையும், மருத்துவப்படிப்பில் நீட் தேர்வு வருவதற்கு முன்னும், நீட் தேர்வு வந்த பின்னும் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தரவுகளையும் ஆய்வு செய்ய இந்தக் குழு நான்கு முறை கூடி, அதன் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை தயார் செய்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில், ஜூலை 8ஆம் தேதி ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறைச் சிறப்பு செயலர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் காகர்லா உஷா, சட்டத்துறைச் செயலர் கோபிநாத், டாக்டர். ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலர் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜக வழக்கு தள்ளுபடி

இந்தக் கூட்டத்தில் குழுவிற்கு வரப்பட்ட கடிதங்களின் அடிப்படையிலும், தரவுகளில் அடிப்படையிலும் ஆய்வு செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றன. 

இந்நிலையில் குழு அமைத்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால், அறிக்கையை தயார் செய்தாலும், வெளியிட முடியாத நிலையில் குழுவினர் இருந்தனர்.

நீட் தேர்வால் பாதிப்பு

இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் கூறும்போது, "நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் முடிவடைந்துவிட்டன. நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை அறிக்கையை குழுவினர் தாக்கல் செய்ய இருக்கிறோம்" என தெரிவித்தார்.

Last Updated : Jul 13, 2021, 5:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details