சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
நீட் தேர்வினால் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்யும் வகையிலும், நீட் முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அவற்றின் சட்ட வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
அறிக்கைத் தயாரிப்பு
அதனைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கருத்துகளைப் பெற்றது. அதில், 86 ஆயிரத்து 342 மனுக்கள் வரப்பெற்றன.
அந்த மனுக்களையும், மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு வருவதற்கு முன்னும், நீட் தேர்வு வந்த பின்னும் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தரவுகளையும் ஆய்வுசெய்ய இந்தக் குழு நான்கு முறை கூடி, அதன் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையைத் தயார்செய்துள்ளது.
அறிக்கையில் பரிந்துரைகள்
அந்த அறிக்கையை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (ஜூஸை 14) அளித்தனர். 165 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், மருத்துவப்படிப்பில் நீட் தேர்வுக்கு முன்னரும், நீட் தேர்வுக்குப் பின்னரும் ஏற்பட்ட பாதிப்புகள், ஏழை எளியவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், நகர்ப்புறம், கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் புள்ளி விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு தேவையில்லை எனவும், மாநில அரசின் 85 விழுக்காட்டு இடங்களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம். மருத்துவக்கல்வியில் மாணவர்களைச் சேர்க்க, தேவைப்பட்டால் மாநில அளவில் தேர்வு நடத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அரசுக்கு அனைத்துவிதத்திலும் அறிக்கை உதவியாக இருக்கும் - ஏ.கே. ராஜன்