சென்னை:முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளருக்கும், வேறு நபர்களுக்கும் விடுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளரும், நடிகருமான அஜய் வாண்டையார் சனிக்கிழமையன்று (டிச., 5) நள்ளிரவில் வந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அதே விடுதிக்கு வந்த மண்ணடியைச் சேர்ந்த சிலர் அஜய் வாண்டையாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அஜய் வாண்டையாரை சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றது. மறுநாள் விடுதிக்கு வந்த அஜய்யும் அவரது ஆதரவாளர்களும், சம்பவத்தன்று ஊழியர்கள் தன்னை பிடித்து வைத்துக்கொண்டு எதிர் கும்பலை சேர்ந்தவர்கள், தன்னை அடிக்கும்வரை வேடிக்கைப் பார்த்ததாக குற்றஞ்சாட்டி, விடுதி ஊழியர்களை அடித்து, உதைத்ததுடன் உணவக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
நட்சத்திர விடுதியில் இருதரப்பினர் அடித்து கொள்ளும் காட்சி: வெளியான சிசிடிவி காட்சி அந்த கண்காட்சி படக்கருவியின் காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது தொடர்பாக விடுதி ஊழியர் மணி அளித்த புகாரின் பேரில் அஜய் வாண்டையார் தரப்பினர் மீதும், அஜய் வாண்டையார் அளித்த புகாரின் பேரில் விடுதி ஊழியர்கள் மற்றும் சிலர் மீதும் ஆபாசமாக திட்டுதல், அடித்து காயம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.