சென்னை: உலக எய்ட்ஸ் தினமான இன்று சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 1.13 விழுக்காடாக இருந்து வந்த எய்ட்ஸ் நோய் தொற்று, தற்போது 0.18 விழுக்காடாக குறைந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் 1.23 லட்சம் பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையை அணுகி, நல்ல முறையில் தேவையான மருந்துகள் எடுத்துக்கொள்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் இருந்தது போல, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது பயந்து வாழ்வதில்லை. மாறாக, இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பேருந்து பயணங்களின் போது சலுகைகள் வழங்கப்படுகிறது," எனக் கூறினார்.