சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டின் முதல் பேரவைக்கூட்டம் நேற்று முன்தினம் (ஜனவரி 5) ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்றுடன் (ஜனவரி 7) நிறைவடைகிறது.
ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரும் சட்ட முன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் அறிமுகம் செய்தார்.
சட்ட முன்வடிவு அறிமுகம்
தமிழ்நாடு தேர்தல் கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் ஆணையர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை மூன்றாண்டுகளாக குறைத்து சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களிடம் இருந்தும் கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான பல புகார்கள் வந்ததன் அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அதன்பேரில், அதிக அளவில் நிதி முறைகேடுகளும் போலி நகைகள் மீதான கடன்கள், கோடிக்கணக்கில் போலி கடன்கள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம் குறைப்பு
கூட்டுறவு சங்கங்களின் பாதுகாப்பை கருதி நிறுவனங்களை நெறிப்படுத்தவும், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கவும், சங்க இயக்குநர்களின் குழுவின் பதவி காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் சட்ட முன்வடிவு இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை 3ஆம் நாள் அமர்வு நேரலை..