தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

130 தொகுதிகளில் அதிமுக vs திமுக! - திமுக வேட்பாளர் பட்டியல்

சென்னை: ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுகவும், ஆட்சியைத் தக்கவைக்கப் போராடும் அதிமுகவும் இத்தேர்தலில் 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரையும் எதிர்த்து திமுகவே இம்முறை களம் காண்கிறது.

dmk admk
dmk admk

By

Published : Mar 12, 2021, 6:29 PM IST

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? அல்லது மேயர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்று விவாதிக்கப்பட்டு வந்த, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஆகியோர், சென்னையிலேயே களம் காண்கின்றனர்.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலின் படி, திமுகவும் அதிமுகவும் 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடியில் சம்பத்குமார் என்ற புதிய முகத்தை களமிறக்கியுள்ளது திமுக. அதேபோல், போடி தொகுதியில் ஒ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் ஓபிஎஸ்சின் மகனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிராஜாராம் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை எதிர்த்து அதிமுகவில் ராமு போட்டியிட உள்ளார். சென்னையின் முன்னாள் மேயர்களான திமுகவின் மா.சுப்பிரமணியனும், அதிமுகவின் சைதை துரைசாமியும் சைதாப்பேட்டையில் களம் காண்கின்றனர். நத்தம் தொகுதியில் நத்தம் விசுவநாதனை எதிர்த்து திமுகவில் ஆண்டி அம்பலமும், கரூரில் திமுகவின் செந்தில் பாலாஜியை எதிர்த்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர்.

130 தொகுதிகளில் அதிமுக vs திமுக!

அதேபோல், அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியில், அவரை எதிா்த்து கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இதேபோல், குமாரப்பாளையத்தில் அமைச்சர் தங்கமணியை வெங்கடாசலமும், கோபியில் அமைச்சர் செங்கோட்டையனை மணிமாறனும், வேதாரண்யத்தில் அமைச்சர் ஒ.எஸ்.மணியனை வேதரத்தினமும், நன்னிலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.காமராஜை ஜோதிராமனும் எதிர்த்து திமுகவில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை அன்பழகனும், ராசிபுரத்தில் அமைச்சர் சரோஜாவை மதிவேந்தனும், பவானியில் அமைச்சர் கே.சி.கருப்பணனை துரைராஜும், திருச்சி கிழக்கில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை இனிகோ இருதயராஜும் எதிர்த்து போட்டியிடுகின்றனர். அதேபோல், அமைச்சர் எம்.சி.சம்பத்தை எதிர்த்து கடலூரில் அய்யப்பனும், அமைச்சர் விஜயபாஸ்கரை விராலிமலையில் பழனியப்பனும், அமைச்சர் செல்லூர் ராஜூவை மதுரை மேற்கில் சின்னம்மாளும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை திருமங்கலத்தில் மணிமாறனும் திமுக சார்பில் எதிர்க்கின்றனர்.

130 தொகுதிகளில் அதிமுக vs திமுக!

ராதாபுரம் தொகுதியில் அதிமுகவின் இன்பதுரையை எதிர்த்து இம்முறையும் திமுக சார்பில் அப்பாவு களம் காண்கிறார். கடந்த தேர்தலில் இன்பதுரை பெற்ற வெற்றியை எதிர்த்து அப்பாவு தொடர்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அடுத்த தேர்தலே வந்துவிட்டது கவனிக்கத்தக்கது. இதுபோல் மொத்தம் 130 தொகுதிகளில் ஆளும் அதிமுகவும் திமுகவும் நேரடி போட்டியில் உள்ளன. மற்றவற்றில் அவற்றின் கூட்டணிகளுடன் இரு கட்சிகளும் தேர்தலை சந்திக்கின்றன.

இதையும் படிங்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர்

ABOUT THE AUTHOR

...view details