இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ்த் தகுதி (Institute of Eminence) வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அப்பல்கலைக்கழகமே திரட்டிக் கொள்ளும் என்று ஒன்றிய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
இந்தியா முழுவதும் 20 பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ்த் தகுதி வழங்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளதில், அண்ணா பல்கலைக்கழகமும் அதில் அடக்கமாம்.
உயர்புகழ்த் தகுதிக்கு கட்டமைப்பை பெருக்க வேண்டுமாம். அதற்கு ரூ.2,750 கோடி செலவாகுமாம். அதில் ரூ.1000 கோடியை ஒன்றிய அரசு வழங்குமாம். மீதி ரூ.1,750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கு தமிழக அரசு வழங்க வேண்டுமாம். இதுதான் உயர்புகழ்த் தகுதிக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள நிபந்தனை.
தமிழக அதிமுக அரசு இதை அடியோடு நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், இது குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழுவை அறிவித்திருக்கிறது.
ஆனால் துணைவேந்தர் சூரப்பாவோ, “தமிழக அரசு ஒன்றும் நிதி தர வேண்டியதில்லை; அண்ணா பல்கலைக்கழகமே 5 ஆண்டுகளில் ரூ.1570 கோடியைத் தன் சொந்த நிதியிலிருந்து செலவழித்துக் கொள்ள முடியும்; எனவே உயர்புகழ்த் தகுதி வழங்க வேண்டும்” என்று, தமிழக அரசைக் கேட்காமலேயே, ஒன்றிய அரசுக்கு எழுதியிருக்கிறார்.
சூரப்பாவுக்கு இந்தத் துணிச்சலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் எங்கிருந்து வந்தது? எடுத்த உடனேயே ஒன்றிய அரசின் இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை ஒரேடியாக நிராகரிக்காமல், அமைச்சர்கள் குழுவைப் போட்டதென்ன அதிமுக அரசு?
இந்த இடைவெளியைப் பயன்படுத்தித்தான் சூரப்பா, ஏதோ தன் வீட்டுச் சொத்துக்கு தமிழக அரசை ஏன் கேட்க வேண்டும் என்பது போல தான்தோன்றித்தனமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் போல உடன்பாடு தெரிவித்து ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இது பிறவிக் குணமோ என்னவோ, சுரப்பாவின் இந்த அத்துமீறலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ்த் தகுதி வழங்குவதற்கு வேண்டிய முழுத் தொகையையும் ஒன்றிய அரசே வழங்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் முழுத் தொகையையும் ஒன்றிய அரசே வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது; ஆனால் அதை ஒன்றிய அரசு ஏற்கவில்லையாம்.